திருச்சி: திருச்சி, புத்தூரில் சமீபத்தில் திறக்கப்பட்ட நடிகர் சிவாஜி சிலையை கட்சி நிர்வாகிகளுடன் பார்வையிட்டு, அவருக்கு மாலை அணிவித்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பங்கேற்பது குறித்து சிலர் புரிதல் இல்லாமல் பேசுகின்றனர். நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு எந்த நிதியும் ஒதுக்காமல் தமிழகத்தை முற்றிலுமாக புறக்கணித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே கல்வி நிதி ஒதுக்கப்படும் என்று சொல்வது சர்வாதிகாரம்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தோம். அந்தத் திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி கூறினார். ஆனால், அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு நிதியை வழங்கியது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் அரவணைத்து ஆட்சி செய்ய வேண்டும். தமிழக மக்கள் வரவிருக்கும் தேர்தல்களில் பாஜக மற்றும் அதிமுகவுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள். ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட அமைப்புகள் ஆன்மீகத்தை அரசியலாக்குகின்றன.

மதம் மற்றும் சாதி அடிப்படையில் நாட்டைப் பிரிப்பதே ஆர்எஸ்எஸ்-இன் நிகழ்ச்சி நிரல். அதைத்தான் பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சி தேசபக்தர்களின் கட்சி. பெரியார் தனது சாதி அடையாளத்தைத் துறந்தார். ஆனால் யுபிஎஸ்சி தேர்வில் அவரை சாதி அடையாளத்துடன் குறிப்பிட்டு கேள்விகள் கேட்பது, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றும் பாஜகவின் திட்டத்தின் வெளிப்பாடாகும். இந்திய கூட்டணியை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. இது தமிழக மக்களுக்கான கூட்டணி.
தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் கூட்டணி. தமிழ்நாட்டைத் தாண்டி தேசத்தைப் பாதுகாக்கும் கூட்டணி. இந்தக் கூட்டணி உடையும் என்று யாரும் பகற்கனவு காணக்கூடாது. அவர் இவ்வாறு கூறினார். கட்சியின் மாநிலப் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., மாவட்டத் தலைவர்கள் எல். ரெக்ஸ், திருச்சி கலை, கோவிந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.