மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குரு பூஜை விழா நடக்கிறது. மதுரை கோரிபாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெண்கலச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 8.10 மணிக்கு மாலை அணிவித்தார்.
அதைத்தொடர்ந்து, சிலைக்கு அடியில் உள்ள தேவர் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்களின் உருவப்படங்களுக்கு முதல்வர் மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், அன்பில் மகேஷ், டிஆர்பி ராஜா, கீதா ஜீவன், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மேயர் இந்திராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக காரில் புறப்பட்டார். முதலமைச்சரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, வி.கே.சசிகலா, சீமான், ஜி.கே.மணி, ஓ.பன்னீர்செல்வம், துரை வைகோ, திருநாவுக்கரசர் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள், கட்சித் தலைவர்கள் கோரிபாளையம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேவர் குருபூஜை விழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.