திருவாரூர்: சைவ சமயத் தல விருட்சமான திருவாரூர் தியாகராஜர் கோயிலின் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த மார்ச் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான பிரசித்தி பெற்ற ஆழி தேரோட்டம் ஏப்ரல் 7-ம் தேதி பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெறுகிறது. 350 டன் எடையும், அலங்கரிக்கும் போது 96 அடி உயரமும் கொண்ட இந்த ஆழி தேரோட்டம் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக கருதப்படுகிறது.
இந்த தேர் கட்டும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. மேலும், தேரில் பொருத்தப்படும் பொம்மைகள், திரைச்சீலைகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. ஆழி தேரோட்டத்தையொட்டி, ஏப்ரல் 6-ம் தேதி இரவு 8 மணிக்கு தியாகராஜ சுவாமிகள் அஜபா நடனத்துடன் ஆழித்தேரோட்டத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 7-ம் தேதி காலை 5.30 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் உற்சவம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு ஆழித் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த தேர் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று ஆழித்தேரோட்டம் நடைபெறும் நான்கு வீதிகளையும், ஆழித்தேரோட்டம் அமைக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் காரத் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினர். தேர் திருவிழாவையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.