கடலூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் முதல்வரின் உத்தரவின்படி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கடலூர் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியம், கீழ்கவரப்பட்டு, கோழிப்பாக்கம், சின்ன பகண்டை, கொங்கராயநல்லூர் உள்ளிட்ட ஊராட்சிகள், மேல்பட்டாம்பாக்கம் டவுன் பஞ்சாயத்து போன்ற கரையோரப் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
எனவே அப்பகுதி மக்கள் மேல்பட்டாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை துணை முதல்வர் இன்று நேரில் சந்தித்து அரிசி, மளிகை பொருட்கள், போர்வைகள், துணிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.
மேலும், பருவமழை தொற்றுநோய் பரவாமல் இருக்க அந்த முகாமில் செயல்படும் மருத்துவ முகாமையும் துணை முதல்வர் பார்வையிட்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் பேசினார். மேலும் முகாமில் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கி அவர்களின் கோரிக்கைகளை பெற்றார்.