அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை 11 மணி நேரத்திற்குப் பின் நிறைவு பெற்றது. தனது சென்னையின் பசுமை வழிச்சாலையில் உள்ள வீட்டில் நடைபெற்ற சோதனையை முடித்த அதிகாரிகளை அமைச்சர் ஐ.பெரியசாமி கைகுலுக்கி, சிரித்த முகத்துடன் அனுப்பி வைத்தார்.

இந்த சோதனையில் அதிகாரிகள் மூன்று பைகளில் ஆவணங்களை எடுத்துச் சென்றனர். திண்டுக்கல்லில் அமைச்சர் மகன் ஐ.பி.செந்தில்குமார் வீடு, மகள் இந்திராணி வீடு மற்றும் அமைச்சரின் நூற்பாலைகளிலும் சோதனைகள் நடைபெற்றன.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக, சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை அசோக் நகரில் உள்ள அமைச்சர் வீட்டில் காலை 7.30 மணியிலிருந்து நான்கு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லின் வள்ளலார் நகரில் உள்ள மகள் இந்திராணி வீட்டிலும், சீலப்பாடியில் உள்ள மகன் செந்தில்குமார் வீட்டிலும் ஆறு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
மேலும், சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில் உள்ள ஐ.பெரியசாமியின் அறையிலும், பசுமை வழிச்சாலையில் உள்ள வீட்டிலும் அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அதோடு, எம்எல்ஏ விடுதியில் செந்தில்குமாரின் அறையிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களை உறுதிப்படுத்த, வீட்டிற்குள் பிரிண்டர் கொண்டு வந்து கையெழுத்து பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட நேர சோதனைக்குப் பிறகு, அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களுடன் வெளியேறினர். இதன் மூலம் சென்னையில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.
இந்த சோதனைகள் தொடர்ச்சியாக நடைபெறுவதால், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.