மதுரை மேலூர் அருகே உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் செய்யப்பட்ட பஷீரின் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தகுதி பெறாத காரணத்தால் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பஷீரின் நியமனத்துக்கு அங்கீகாரம் வழங்க மறுத்தார். இந்த உத்தரவை ரத்து செய்யவும், பட்டதாரி ஆசிரியராக தனது நியமனத்தை அங்கீகரிக்கக் கோரியும் மதுரை உயர் நீதிமன்றத்தில் பஷீர் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, கல்வித்துறை சார்பில், மதுரை ஐகோர்ட்டில், மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவில், “சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது.
கல்வி ஆணையமாக என்.சி.டி.இ.யை அரசு நியமித்து, அதில் ஒரு தகுதியாக டி.இ.டி. தகுதியை நிர்ணயித்துள்ளது. எனவே, டிஇடி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதி சிறுபான்மை நிறுவனங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த வழக்கில், விண்ணப்பதாரர் டிஇடி தேர்வில் தேர்ச்சி பெறாததால், அவரது நியமனத்தை அங்கீகரிக்க முடியாது. டிஇடி தகுதியின் அடிப்படையில் ஆசிரியர் நியமனம் செய்ய அனுமதி மறுத்து கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு செல்லுபடியாகும். எனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.