மதுரை: தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்கள் தான். அவர்களை மீட்க, மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்,” என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. இலங்கை சிறையில் உள்ள 26 மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மீனவர்களை விடுவித்து தமிழகம் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். அப்போது நீதிபதி கூறியதாவது: தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்கள் தான். அவர்களின் பாதுகாப்பு முக்கியம்.
பிரச்சனை வேறொரு நாட்டுடன் தொடர்புடையது. மீனவர்களை விரைவாக மீட்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என நீதிமன்றம் நம்புகிறது. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.