சென்னை: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ராஜ்யசபாவில் திட்டமிடப்படாத நேரத்தில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு கூறும்போது, “உங்கள் வீட்டு வாசலில் உணவுப் பொருட்களை டெலிவரி செய்யும் ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் வெறும் 10 நிமிடங்களில் மருந்து, மாத்திரைகளை உங்கள் வீட்டு வாசலில் டெலிவரி செய்வதாக அறிவித்திருப்பது ஒட்டுமொத்த மருத்துவ உலகையும், மருந்து நிறுவனங்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
உயிர்காக்கும் மருந்துகளை இவ்வளவு வேகமாக வழங்குவதாகக் கூறுவது இந்திய மருந்துச் சட்டங்களை மீறுவது மட்டுமல்ல, பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கும் அச்சுறுத்தலாகும். நோயாளிகளின் பாதுகாப்பிற்கு கேடு விளைவிக்கும் இந்த செயல், நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தேவையான மருந்து பாதுகாப்பு நடைமுறைகளை மீறுவதாகும். மருந்தகங்களுக்குச் செல்லும் நுகர்வோரின் பாதுகாப்பிற்காக குறிப்பிட்ட நோயாளியின் அடையாளம், மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளின் பட்டியல் போன்றவற்றைச் சரிபார்க்கும் நடைமுறையை இது அப்பட்டமாக மீறுவதாகும்.
அதனால்தான் ஸ்விக்கியின் துணை நிறுவனமான இன்ஸ்டாமார்ட் மற்றும் இ-ஃபார்மசி நிறுவனமான பார்ம் ஈஸி பத்து நிமிடங்களில் மருந்துகளை சப்ளை செய்ய எடுத்த இந்த முடிவை அகில இந்திய மருந்து வியாபாரிகள் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது. இந்த புதிய நடைமுறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் ஒன்று ஏற்கனவே சில விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் என்பதை சுட்டிக்காட்டி அகில இந்திய மருந்து விற்பனையாளர்கள் சங்கமும் தனது கவலையை பகிர்ந்து கொண்டது.
பத்து நிமிடத்தில் மருந்து சப்ளை செய்யும் வேகத்தில் நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகளையோ, போலி மருந்துகளையோ கொடுக்கும் அபாயம் உள்ளது என்பதை அரசு உணர வேண்டும். “இந்த பத்து நிமிட டோர் டெலிவரி முறையில் தேவையான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற முடியாது. எனவே, பத்து நிமிடத்தில் மருந்து வழங்கும் திட்டத்திற்கு தடை விதித்து, ஸ்விக்கி உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள், மக்கள் உயிருடன் விளையாடுவதை தடுக்க, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.