சென்னை: திருவொற்றியூர் மெட்ரோ பணியின் போது, மாணிக்கம் நகர் மெயின் ரோட்டில் இயங்கி வந்த பஸ் ஸ்டாண்ட் மற்றும் பணிமனை அஜாக்ஸ் நகருக்கு மாற்றப்பட்டது. தற்போது இங்கிருந்து பிராட்வே, தாம்பரம், கிளாம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் தினமும் 80-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். ஆனால், போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் மின்சாரம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்வதில் சிரமம் இருப்பதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், திருவொற்றியூரில் மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்து வசதிகளை ஒருங்கிணைத்து புதிய பேருந்து நிலையம் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கான நிறுவனத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் கழக அதிகாரிகள் கூறியதாவது:- பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்தவும், அதிகரிக்கவும், மெட்ரோ ரயில், மாநகர பேருந்துகள் போன்ற பொது போக்குவரத்து வசதிகளை ஒருங்கிணைந்த நிலையமாக மாற்றி வருகிறோம்.
அதன்படி திருவொற்றியூர் மெட்ரோ ரயில் அருகே புதிய பேருந்து நிலையம் கட்ட திட்டமிட்டு டெண்டர் விடப்பட்டுள்ளோம். தற்போதுள்ள பழைய கட்டடங்கள், கொட்டகைகள் அகற்றப்பட்டு சற்று உயரத்தில் புதிய கட்டடம் கட்டப்படும். பேருந்து நிலையம் மற்றும் பணிமனை தனித்தனியாக இருக்கும். பேருந்துகள் உள்ளே நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் போதிய சாலைகள், பயணிகள் இருக்கைகள், கழிப்பறை வசதிகள், போதுமான வாகன நிறுத்துமிட வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்த உள்ளோம். மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்ல அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படும். நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை விரைவில் வழங்கப்படும். அடுத்த 12 மாதங்களில் அனைத்து பணிகளையும் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.