மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி அடர்லி-ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே நிலச்சரிவு ஏற்பட்டு, பாறாங்கற்கள் மற்றும் மண் சரிந்து பாதையில் சேதம் ஏற்பட்டது.
தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நடந்து வருவதாலும், நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டதாலும் அன்று முதல் நேற்று (ஆகஸ்ட் 31) வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் அறிவித்தது.
இடையில் ஓரிரு நாட்கள் மட்டுமே ரயில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலை ரயில் நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் வந்த 180 பயணிகளுடன் நேற்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயில் புறப்பட்டது.
நீலகிரி மாவட்டத்திற்கு நிலச்சரிவு மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு மாதத்திற்கு பிறகு நிறுத்தப்பட்ட மலை ரயில் மீண்டும் இயக்கப்பட உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.