சென்னை வீட்டில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ ஆகியோரின் வருகை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜாகி வீட்டு ஓய்வில் இருந்த ஸ்டாலினை நலம் விசாரிக்க வந்ததாக தெரிவித்தாலும், இந்த சந்திப்பு தேர்தல் முன் கூட்டணிக் கணக்கீட்டுக்குள் அடங்கி இருக்கலாம் என்பதுதான் பொதுநிலை விமர்சனம். ஏனெனில், மதிமுக நிர்வாகிகள் சிலர் சமீபத்தில் திமுகவில் இணைக்கப்பட்ட சம்பவமும், தேமுதிக தலைவர் பிரேமலதாவின் ஸ்டாலின் சந்திப்பும் தற்போது முக்கியமான சுட்டிக்காட்டுகளாக இருக்கின்றன.

திமுக கூட்டணியில் மதிமுக தனது இடத்தை உறுதி செய்ய விரும்புகிறது என்பதற்கான அறிகுறியாக இந்த சந்திப்பை பார்க்கலாம். கடந்த சில மாதங்களில் மதிமுக மற்றும் துரை வைகோவின் பாஜகவுடன் தொடர்பு வைத்த முயற்சிகள், திமுகவுக்கு எச்சரிக்கையாக இருந்ததாக கூறப்படுகிறது. அதனால்தான், நிர்வாகிகளை நேரடியாக திமுகவில் இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் மதிமுக மீது அழுத்தம் கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக அரசியல் விமர்சனங்கள் உள்ளன.
வைகோ செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த சந்திப்பு சுமூகமானது என்றும், சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். கவின் படுகொலை தொடர்பான அரசு நடவடிக்கைகளுக்கும் பாராட்டு தெரிவித்த அவர், ஆணவ கொலைகளை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் தேவையெனவும் வலியுறுத்தினார். திருச்சியில் செப்டம்பர் 15ல் அண்ணாவின் பிறந்த நாள் விழா மதிமுக சார்பில் நடைபெறும் என்றும், திமுகவின் முப்பெரும் விழா செப்டம்பர் 17ல் கரூரில் நடைபெறும் என்றும் கூறினார்.
திமுக கூட்டணியில் மதிமுக தொடரும் என்பதற்கான அதிகாரப்பூர்வ உறுதிமொழியே இந்த சந்திப்பு என பலரும் கருதுகிறார்கள். மதிமுக பாஜகவுடன் எந்தவித உறவும் வைத்துக் கொள்ளாது என்றும், இந்துத்துவ சக்திகளை எதிர்த்தே தங்கள் நிலை தொடரும் என்றும் வைகோத் தெரிவிப்பது, திமுக கூட்டணிக்குள் அந்த கட்சி இருக்கும் என்பதற்கான நிச்சயத்தை தருகிறது. எதிர்வரும் நாட்களில் தேர்தல் தயாரிப்புகள் தீவிரமாவதைப் போலவே, கூட்டணிக்குள் நடக்கும் இந்த தற்காலிக நகர்வுகளும் அரசியல் ரீதியாகப் பல புதிய முடிவுகளைத் தோற்றுவிக்கும்.