சென்னை: பெரும்பாலான ஆண்கள், பெண்களை உணர்வுரீதியாக பலவீனமானவள் என்றே கருதுகிறார்கள். ஆனால் பெண்கள் பலவீனமானவர்கள் இல்லை. அவள் அர்த்தத்தோடுதான் ஆசைப்படுவாள். ஒரு பெண், ஒரு ஆணைப் பார்த்து அனுதாபப்படுவது வேறு, ஆசைப்படுவது வேறு. அவள் ஆசைப்பட்டு வாழ்க்கையில் இணைத்துக்கொள்ள விரும்பும் ஆணுக்கு திறமையும், வெற்றியும் மிக தேவை என்று கருதுவாள்.
தீரமும், திறமையும் மிகுந்தவர்களை பெண்கள் விரும்ப அவர்களது உணர்வில் ஊறிய பாரம்பரியப் பண்பு தான் காரணம்.
பழைய காலத்தில் வேட்டையாடி தனக்கும், தன் பிள்ளைகளுக்கும் உணவளிப்பதற்காகவும், பிறரிடம் இருந்து தன்னைக் காத்து, தான் வாழ உத்தரவாதம் தருவதற்கும் பலம் படைத்தவனையே பெண் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. முதலில் எதிர்பார்த்த உடல் பலம் பின்பு பொருளாதாரம் சார்ந்த பின்புலமாகவும் ஆகிவிட்டது. காலம் இப்போது பெண்களையும் வெகுவாக மாற்றியிருக்கிறது. பெண்கள் சுயமாகச் சம் பாதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். எந்தவித பிரச்சினையும் இல்லாமல் வாழ்க்கை சுமூகமாக நகர வேண்டுமானால் ஓரளவு வசதி படைத்தவரே தன்னை மணமுடிக்கவேண்டும் என்று எல்லா பெண்களுமே எதிர்பார்க்கிறார்கள்.
பெண் யாரை விரும்புகிறாளோ அவர் முன்னால் தன்னை கவர்ச்சியாக காட்டிக்கொள்ள விரும்புவாள். தன்னை விரும்புகிறவர் பெரும்பாலும் தன்னிடம் உடல் கவர்ச்சியைத்தான் எதிர்பார்க்கிறார் என்ற உளவியல் ரீதியான உண்மை தெரியவரும்போது, அவரைக் கவர்வதற்காக அலங்கரித்துக்கொள்கிறாள். அலங்காரமாக-கவர்ச்சிகரமாக தங்களைக் காட்டிக்கொள்ளும் பெண்கள் பிறரைக் காட்டிலும் திறன் படைத்தவர்களாக, சுறுசுறுப்பானவர்களாகத் தெரிகிறார்கள். அழகு, பெண்களை தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும் வெளிஉலகுக்கு காட்டுகிறது.