சென்னை: தமிழக அரசியல் பரப்பளவைக் கலைக்கும் வகையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது இரண்டாவது மாநில மாநாட்டை அறிவித்துள்ளது. வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் இந்த மாநாடு நடைபெறும் என விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில், அந்த தேதியே விஜய் தனது திருமண நாளாகும். 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி விஜய் தனது ரசிகையாக இருந்த சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இந்த ஆண்டு அந்த திருமண நாளின் 26ஆம் ஆண்டு ஆகும்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி ஹீரோவாக திகழ்ந்த விஜய் தற்போது முழுமையாக அரசியல் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி, வெறும் சில மாதங்களில் முதல் மாநில மாநாட்டை விழுப்புரத்தில் பிரம்மாண்டமாக நடத்தியிருந்தார். அதன் பின்னர் பரந்தூர் விமான நிலையத்திற்கான எதிர்ப்பு குழுவினரை சந்தித்தது, காவல் மரணங்களை எதிர்த்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் நேரடியாக கலந்துகொண்டது உள்ளிட்ட நடவடிக்கைகள் அவரது அரசியல் தீவிரத்தை வெளிப்படுத்துகின்றன.
இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி, தமிழக முழுவதும் சுற்றுப்பயணங்களை மேற்கொள்வதற்கான ஆரம்பமாகவே இந்த இரண்டாவது மாநாடு நடத்தப்படுகிறது. இன்று மதுரையில் நடைபெற்ற பூமி பூஜை நிகழ்வில் திரண்ட தொண்டர்கள் கூட்டம் இது ஒரு சிறிய மாநில மாநாடாகவே இருந்தது என கூறப்படுகிறது. மாநாட்டு தேதி திருமண நாளுடன் இணைவது, சமீபத்தில் அவரது குடும்பம் குறித்த வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையிலும் பார்க்கப்படுகிறது.
விஜய், தனது குடும்ப வாழ்க்கையையும் அரசியல் பயணத்தையும் சமநிலையுடன் முன்னெடுத்து வருகிறார். தனது திருமண நாளில் தனது கட்சியின் முக்கிய அரசியல் மாநாட்டை நடத்தும் முடிவின் மூலம், தன்னை சுற்றியுள்ள விமர்சனங்களுக்கு ஒரு மறைமுக பதிலை அளித்துள்ளார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். 2026 தேர்தலில் வெற்றி பெரும் நோக்கில் நகரும் வெற்றிக் கழகத்திற்கு இந்த மாநாடு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவது உறுதி.