சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இது நாளை பிற்பகல் வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:- தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த சில மணி நேரத்தில், புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இது நாளை பிற்பகல் வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும். இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 80 கிமீ வேகத்திலும், சில நேரங்களில் மணிக்கு 90 கிமீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும்,” என்றார்.