சென்னை: அமாவாசை தினமான செப்டம்பர் 16-ம் தேதி முதல் சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. பலத்த சத்தத்துடன் 2 பேர் உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்து பொதுமக்களை அச்சுறுத்துகின்றன.
இதன் காரணமாக சென்னை மெரினாவை அடுத்த சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் தொடர் அலை காரணமாக கடலோர அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் சீற்றத்தால் அப்பகுதியில் கடற்கரையோரம் கட்டப்பட்டிருந்த பல மீனவர்களின் வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன.
கடல் அலைகள் தங்களது வீடுகளுக்குள் புகுந்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் தங்களது உடமைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
பலர் தங்கள் வீடுகளை பாதுகாக்க மணல் மூட்டைகளை போட்டு வருகின்றனர். கடல் சீற்றத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து கணக்கெடுத்தனர். திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு கடல் சீற்றத்துடன் காணப்படும் என இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் (INCOIS) எச்சரித்துள்ளது.