மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் பாமக வன்னியர் சங்கம் நடத்திய மாநாடு விமர்சனங்கள் மற்றும் வரவேற்புகளுடன் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாடு நடக்கும் இடத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு, 100 ஏக்கர் பரப்பளவில் திடல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநாட்டுக்காக திரண்ட தொண்டர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினர். போலீசாரின் எச்சரிக்கைகளை மீறி, நடுரோட்டில் பந்தை வைத்து விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு, சிலர் கடற்கரையில் குளித்து ஆடல்களில் ஈடுபட்டனர். இதனையும் வீடியோவில் பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். பாதுகாப்பு பணிக்காக 5000க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் இருந்தும், சிலர் கட்டுப்பாட்டை மீறினர்.மாநாட்டின் ஒரு பகுதியிலே, வன்னியர் சங்க கொடி பறக்க விடப்பட்டபோது பாராகிளைடர் பறந்தது.
அதை பார்த்து அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமக தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கை அசைத்தனர். மாநாட்டின் போது பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்த குறும்படம் வெளியிடப்பட்டது. இது தொண்டர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இந்த மாநாட்டிற்கு முழுமையாக அன்புமணி ராமதாஸ் தலைமையேற்று ஏற்பாடு செய்துள்ளார். இதில் ராமதாஸ், அன்புமணி, ஜிகே மணி மற்றும் வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
அவர்களது குடும்பத்தினரும் இதில் கலந்துகொண்டனர்.மாநாட்டின் முக்கிய நோக்கம் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட சமூக நீதிக்கான கோரிக்கைகளை வலியுறுத்துவதாகும். அரசியல் நோக்கங்களோடும் முக்கிய செய்தியோடும் இந்த நிகழ்வு காணப்பட்டது.பாமக தொண்டர்களின் செயற்பாடுகள் மற்றும் நடந்த சம்பவங்கள் தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளன.