சென்னை: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா மாக்கம்பாளையம் கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்த, அறநிலையத்துறைக்கு உத்தரவிடக் கோரி, கோவில் அறங்காவலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், கோயில் திருப்பணி மற்றும் ராஜகோபுரம் கட்டும் பணி நடைபெற்று, கும்பாபிஷேகம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கும்பாபிஷேகம் நடத்த அனுமதி மறுத்து அறநிலையத்துறை திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே அந்த உத்தரவை ரத்து செய்து கும்பாபிஷேகத்துக்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அதேபோல், சீரமைப்பு குழு அமைத்து அதில் தன்னையும் சேர்த்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிடக்கோரி கோவில் அர்ச்சகர் சிவராஜ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அறநிலையத்துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வக்கீல் அருண் நடராஜன், உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் மண்டல, மாநில வல்லுநர் குழுவின் அனுமதி பெறாமல் கோயில் சீரமைப்பு பணிகள் நடந்ததால் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இரண்டு நிபுணர் குழுவின் அனுமதி பெற்று சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த 60 நாட்கள் ஆகும் என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நிபுணர் குழுக்களின் அனுமதி பெற்ற பின்னரே கோயில் சீரமைப்பு, கோபுரம் கட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். சீரமைப்பு பணியை ஆய்வு செய்வது குறித்து அறநிலையத்துறையிடம் விண்ணப்பித்து, உரிய அனுமதிகளை பெற்று, 60 நாட்களுக்குள் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.