சென்னை: வேளச்சேரி ஏரியில் ஆக்கிரமிப்பு மற்றும் மாசுபாடு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய தாமதமாகியிருப்பதை தீர்ப்பாயம் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான செய்தி 2020 ஆம் ஆண்டு நாளிதழில் வெளியானது. அதில், கழிவுநீர் கலப்பதும், குப்பை கொட்டுவதும் ஏரியை மாசடையச் செய்ததுடன், ஆக்கிரமிப்புகள் காரணமாக பரப்பளவு கணிசமாக குறைந்துள்ளதாக கூறப்பட்டது.
இதையடுத்து, வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கம் பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய பொறுப்பில் உள்ள துறைச் செயலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டத்தை தலைமைச் செயலர் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த கூட்டம் குறித்து அறிக்கையும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தது.
வழக்கின் நடப்பு விசாரணையில், சென்னை ஐஐடி பேராசிரியர் சன்னாசிராஜ் தலைமையிலான குழுவினர் ஏரியில் ஆய்வு நடத்தியதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். அதே நேரத்தில், தீர்ப்பாய உத்தரவுகள் செயல்படுத்தப்படவில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். இது தலைமைச் செயலரின் செயலிழப்பை காட்டுவதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
வேளச்சேரி ஏரி தொடர்பான அவசரக் கூட்டத்தின் விவரங்கள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞர் நான்கு வார கால அவகாசம் கோரியுள்ளார். தீர்ப்பாயம் மேலும் ஒரு வாய்ப்பை வழங்கியதாகவும், இதை கடைசி அவகாசமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தது.
தலைமைச் செயலர் ஜூலை 7க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த தேதிக்குள் அறிக்கை வராதால், தீர்ப்பாயம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கத் தயங்காது எனவும் உத்தரவில் எச்சரிக்கப்பட்டுள்ளது.