தூத்துக்குடி: ஒப்பந்ததாரர் அலட்சியத்தால் பலியான தூய்மை பணியாளர் போராடி உடலை மீட்டனர். இந்த பரபரப்பான மீட்பு காட்சிகள் கண்கலங்க வைத்துள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடைக்குள் உள்ள மோட்டாரை செல்போனில் படம் எடுக்க சொன்ன ஒப்பந்தாரரை நம்பி உள்ளே செல்போனுடன் இறங்கிய தூய்மை பணியாளர் நூலிழையில் உயிர்தப்பிய நிலையில் , செல்போனை வாங்குவதற்கு குனிந்தவர் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆதிபராசக்தி நகர் பகுதியில் உள்ள கழிவுநீரை பம்ப் செய்து வெளியேற்றக் கூடிய பாதாள சாக்கடை உள்ளது இந்த பாதாள சாக்கடை குழாய்க்குள் கழிவு நீரை வெளியேற்ற மோட்டர் பம்ப் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் நேற்று மாலை இந்த பாதாள சாக்கடை குழாய்க்குள் உள்ள மோட்டார் பம்பை படம் எடுத்து அனுப்ப மாநகராட்சி அதிகாரிகள் ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்தக்காரருக்கு கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து ஒப்பந்ததாரர் தூய்மை பணியாளர்களை படம் எடுக்க கூறியுள்ளார்
இதைத் தொடர்ந்து தூய்மை பணியாளர் சங்கர் என்பவர் சாதாரண முக கவசம் அணிந்தபடி பாதாள சாக்கடை குழாய்க்குள் அமைந்துள்ள மோட்டாரை செல்போன் காமிராவில் படம் எடுத்துள்ளார். பின்னர் கீழே இருந்தபடி செல்போனை மற்றொரு தூய்மை பணியாளரான நெல்லை பருத்தி குளம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரிடம் செல்போனை கொடுத்துள்ளார்.
முககவசம் அணியாத ராஜா, பாதாள சாக்கடைக்குள் குனிந்த படி சங்கரிடம் இருந்து செல்போனை வாங்க முயற்சி செய்துள்ளார் . அப்போது விஷவாயு நேரடியாக ராஜாவின் முகத்தில் தாக்கியதில் அவர் அப்படியே மயங்கி பாதாள சாக்கடைக்குள் சரிந்து விழுந்தார் .
இதைத்தொடர்ந்து சங்கர், ராஜாவை மீட்கும் பணியில் ஈடுபட்டதாகவும், அவருக்கும் மயக்கம் வந்ததாகவும், மேலே இருந்த சிலர் சங்கரை உடனடியாக மேலே தூக்கி மீட்டுள்ளனர். உடனடியாக விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவர், மயங்கிய நிலையில் கிடந்த சங்கருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றினர்.
பாதாள சாக்கடைக்குள் சிக்கிய ராஜாவை மீட்க தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போராடினர் தீயணைப்பு வீரர் ஒருவர் ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய சுவாசக்கருவி பொறுத்திக் கொண்டு , பாதாள சாக்கடைக்குள் இறங்கி, உள்ளே சிக்கி இருந்த ராஜாவை கயிறு கட்டி மீட்டனர் .
ராஜா மீட்ட தீயணைப்புத் துறையினர் அவருக்கு சிபிஆர் முறையில் முதலுதவி சிகிச்சை அளித்து பார்த்தனர் ஆனால் அவர் விஷவாயு தாக்கி சாக்கடை உள்ளே புகுந்ததால் இறந்தது தெரிய வந்தது.உயிரிழந்த தூய்மை பணியாளர் ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . போதிய பாதுகாப்பு இல்லாமல் தூய்மைபணியாளர்களை பாதாள சாக்கடைக்குள் இறக்கிய ஒப்பந்ததாரர், மற்றும் படம் எடுத்து அனுப்ப சொன்ன அதிகாரிகளின் அவசரத்தால் இந்த விபரீத உயிரிழப்பு நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில், அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டு என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.