சென்னை: சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, தெலுங்கு கங்கை நதி நீர் ஒப்பந்தப்படி, ஆண்டுதோறும் 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். இதில் 3 டிஎம்சி இழப்பீடும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் என மொத்தம் 12 டிஎம்சி வழங்க வேண்டும். ஆந்திர அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காததால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினர்.

இதையடுத்து தமிழக அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த மாதம் 24-ம் தேதி வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் கண்டலேற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 28-ம் தேதி 152 கி.மீட்டரை கடந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்ட்டை வந்தடைந்தது.
இந்நிலையில், கண்டலேறு அணையில் கூடுதலாக 300 கனஅடி முதல் 800 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக அதிகரித்து தற்போது 1,340 கனஅடியாக உள்ளது. இந்த நீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட்டுக்கு கடந்த வாரம் 290 கன அடியாக அதிகரித்து தற்போது 316 கன அடியாக உள்ளது.