திருப்பத்தூர்: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, தங்கக் கவசத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வெள்ளி ரதத்தில் உற்சவம் புறப்பட்டது.

பின்னர், நாதஸ்வரம் முழங்க, சிவபெருமானின் பிரதிநிதி அங்குசதேவர், விநாயகரின் பிரதிநிதியான அஸ்திரதேவர் ஆகியோர் வெள்ளிப் பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பட்டு கோயில் குளத்துக்கு வந்தடைந்தனர். அங்கு பிச்சை குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அங்குச தேவர், அஸ்திர தேவர் ஆகியோருக்கு தேவார பாடல்களுடன் ஆராதனை செய்தனர்.
பின்னர், பால், திருமஞ்சனம், சந்தனம், பனீர் உள்ளிட்ட 11 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கோவில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதனை காண தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். சிலர் கோயில் வளாகத்தில் அமர்ந்து புதிய கணக்கு தொடங்கி, தங்கள் தொழில், தொழில் சீராக நடக்க வேண்டும் என்று வழிபாடு செய்தனர்.