சென்னை: சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால் அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, வெளியாட்கள் எளிதில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய முடியாத வகையில் சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. மேலும், தொடர் நடவடிக்கைகளுக்காக பல்வேறு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த வழிகாட்டுதல்கள் அடங்கிய சுற்றறிக்கையை பதிவாளர் ஜே.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:- அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வகுப்பு மற்றும் விடுதி நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை. கட்டுமானத் தொழிலாளர்கள் எக்காரணம் கொண்டும் வேலை நேரம் முடிந்து பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கக் கூடாது. வெளி ஆட்கள் நடைப் பயிற்சிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் காவலர்கள் ரோந்து செல்ல வேண்டும்.
அனுமதியின்றி வாகனங்கள் நிறுத்தப்பட்டால், போலீசில் புகார் அளிக்கப்படும். ஆன்லைன் நிறுவனங்களின் டெலிவரி ஊழியர்கள் பல்கலைக்கழக நுழைவு வாயில் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்கள் எப்போதும் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். பல்கலைக்கழக வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் விளக்குகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான குழு ஒவ்வொரு மாதமும் கூடி மாணவர்களிடம் கருத்து கேட்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து மாணவர்களும், பேராசிரியர்களும் காவல்துறை உதவியாளர் செயலியை பதிவிறக்கம் செய்யச் சொல்ல வேண்டும். கல்லூரிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் போது மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். வாகனத்தில் வருபவர்களின் வாகன எண் மற்றும் செல்போன் எண்களையும் பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். இது பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.