புதுடெல்லி: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்தது. இந்நிலையில், தங்கத்தின் மீது முதலீடு செய்திருந்த பொதுமக்களுக்கு ரூ.10.74 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 23-ம்தேதி 2024-25 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் தங்கத்தின் மீதான சுங்க வரியை 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைத்தார். இதனால், தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ரூ.10.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. உலகளாவிய தங்கத்தில் 11 சதவீதம் இந்திய குடும்பங்களிடம் உள்ளது.
இந்நிலையில் தங்கவிலை சரிவு, அதில் முதலீடு செய்திருந்த குடும்பங்களுக்கு நெருக்கடியாக அமைந்துள்ளது. இவ்வாண்டு தொடக்கம் முதல் ஜூலை வரையில் சென்செக்ஸ் 11 சதவீதம் உயர்ந்தது. அதுவே தங்கம் 14.7 சதவீத உயர்வைக் கண்டது. ஜூலை 22-ம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.54,600 ஆக இருந்தது. ஜூலை 23, பட்ஜெட்டுக்குப் பிறகு அது ரூ.52,400 ஆக குறைந்தது.
இந்திய குடும்பங்கள் கோயில்கள் வசம் மட்டும் 30 ஆயிரம் டன் தங்க நகைகள் உள்ளன. இதன்படி, ஜுலை 22-ல் அதன் மதிப்பு ரூ.218.63 லட்சம் கோடியாக இருந்தது. மறுநாள் பட்ஜெட் அறிவிக்கப்பட்ட பிறகு அது ரூ.207.89 லட்சம் கோடியாக குறைந்தது.