கெங்கவல்லி: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால், சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து பகுதியில், 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட, வலசக்கல்பட்டி ஏரி, 46 அடியை எட்டியுள்ளது. கடந்த வாரம் முதல் உபரி நீர் வெளியேறி வரும் நிலையில், தற்போது கூடுதல் தண்ணீர் வருவதால், பொதுப்பணித்துறையினர் 1200 கன அடி தண்ணீர் திறந்து விடுகின்றனர்.
தண்ணீர் வெளியேறும் பகுதியில், அப்பகுதி மக்கள் ஆபத்தை உணராமல் ஆழமான பகுதியில் உள்ள தண்ணீரில் இறங்கி மீன்பிடித்து வருகின்றனர். இதையடுத்து, ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி உத்தரவின் பேரில், கெங்கவல்லி தாசில்தார் (பொ) ஈஸ்வரி, கெங்கவல்லி எஸ்ஐ கணேஷ்குமார் தலைமையில், வலசக்கல்பட்டி ஏரிக்கு சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை விரட்டியடித்தனர்.
பின்னர் கெங்கவல்லி போலீசார் தலைமையில் கெங்கவல்லி போலீசார் வலசக்கல்பட்டி ஏரி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.