வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் 25 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பசுமையான காடுகளில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த வனவிலங்கு சரணாலயத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட புள்ளிமான்கள், காட்டு மான்கள் மற்றும் குதிரைகள், நரிகள், குரங்குகள், முயல்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.
மேலும் ராம பாதம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் 150-க்கும் மேற்பட்ட மூலிகை காடுகள் உள்ளன. கோடியக்கரை செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் உள்ள சன்யாசி மற்றும் முனீஸ்வரன் கோவில்களுக்கு அருகில் சாலையின் இருபுறமும் காணப்படும் தில்லை மரத்தின் இலைகள் பல்வேறு வண்ணங்களில் காணப்படுகின்றன. இம்மரத்தின் இலைகள் குறிப்பிட்ட காலங்களிலும், சில நாட்களுக்கும் மட்டும் மூன்று நிறங்களாக மாறி, மீண்டும் பச்சை நிறமாக மாறும்.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் சாலை வழியாக செல்லும் போது இந்த இயற்கை அழகை நிறுத்தி ரசிக்கின்றனர். இந்த தில்லை மரம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள புனித மரமாகும். இந்த மரத்தின் இலைகள் ஒரே மாதத்தில் பச்சை நிறத்தில் இருந்து சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறமாக மாறிவிடும். இதுகுறித்து கோடியக்கரை ஜோசப் டேனியல் கூறுகையில், கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள முனியப்பன் ஏரியின் பழைய கலங்கரை விளக்கம் பகுதியில் இந்த தில்லை மரம் காணப்படுகிறது.
இந்த மரத்தின் இலைகள் ஆரம்பத்தில் பச்சை நிறத்தில் இருக்கும், பின்னர் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறமாக மாறி, உதிர்ந்து மீண்டும் பச்சை நிறமாக மாறும். இந்த நிகழ்வு ஒரு மாதத்திற்குள் நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகள் ஏப்ரல் மாதம் முழுவதும் மட்டுமே இந்த வண்ண மாற்றத்தின் காட்சிகளை அனுபவிக்க முடியும். இந்த மரத்தின் சாறு விஷமானது. இந்தச் சாறு உடலுடன் தொடர்பு கொண்டால், அரிப்பு மற்றும் புண்களை ஏற்படுத்தும். எனவே, சுற்றுலா பயணிகள் இந்த மரத்தின் அழகை மட்டும் கண்டு ரசிக்க வேண்டும். அதன் உள்ளே இருக்கும் இலைகள் அல்லது பழங்களை பறிப்பது ஆபத்தானது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.