சென்னை: எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான காலக்கெடுவை தேசிய மருத்துவ ஆணையம் நீட்டித்துள்ளது. இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வேண்டும். நடப்பு ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் மாணவர்களின் மதிப்பெண் விவரம், இட ஒதுக்கீடு விவரம், கட்டண விவரம் உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய 8-ம் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்த என்எம்சி, தற்போது 23-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், எம்.டி., எம்.எஸ்., போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்கவும், தற்போதுள்ள இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. ஏற்கனவே ஒருமுறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டு, அதுவும் கடந்த 8-ம் தேதியுடன் நிறைவடைந்தது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, வரும் 22-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.