சென்னை: திருப்பதி மற்றும் காட்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே 104 கி.மீ தொலைவிற்கு இரட்டை ரயில் பாதையை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த தகவலை வெளியிட்டார்.
இந்த திட்டத்திற்கு ரூபாய் 1,332 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு, சுமார் 14 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கான அணுகுமுறையை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இந்த இரட்டை ரயில் பாதை திட்டம், திருப்பதி ஏழுமலையான் கோவில், காளஹஸ்தி சிவன் கோயில், காணிபாக்கம் விநாயகர் கோயில், சந்திரகிரி கோட்டை ஆகிய இடங்களைக் குறிக்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் படி, 104 கி.மீ தொலைவிலான ஒற்றை ரயில் பாதையை இரட்டை பாதையாக மாற்றப்படுகிறது.
கடந்த வாரம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு 18,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இத்திட்டத்திற்கும் இப்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தில் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே, திருப்பதி – காட்பாடி இடையேயான ஒற்றை ரயில் பாதையை இரட்டை வழிப்பாதையாக மாற்றுவது ஏப்ரல் 9-ல் ஒப்புதலுக்கு வந்துள்ளது.” என்றார்.
இந்த திட்டம், வேலூர் மற்றும் திருப்பதியின் கல்வி மற்றும் மருத்துவ மையங்களுடன் இணைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும். இத்திட்டத்தில் 15 ரயில் நிலையங்கள், 17 பெரிய பாலங்கள், 327 சிறிய பாலங்கள், 7 சாலை மேம்பாலங்கள் மற்றும் 30 சாலை கீழ் பாலங்கள் சேர்க்கப்படவுள்ளது.
இருவழிப் பாதையை அமைப்பதன் மூலம், ஆண்டுக்கு 40 லட்சம் டன் சரக்குகள் அதிகமாக கையாள முடியும் என்றும், இந்த திட்டம் 113 கி.மீ ரயில் பாதையை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.