சென்னை: அழிவின் விழிம்பில் உள்ள சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் பொறுப்பும், கடமையும் நமக்கு உள்ளது. அதை எப்போதும் மறக்கக்கூடாது.
இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலமாக குறைந்து வருகிறது. நகரமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அழிவின் விளிம்பில் உள்ளன சிட்டுக்குருவிகள்.
நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே உலக சிட்டுக் குருவிகள் தினத்தின் நோக்கம்.
முந்தைய காலங்களில் வீடுகளில் காணப்படும் பரண், மாடம், விட்டம், ஓடுகளின் இடைவெளிகளில், காற்றுக்காக விடப்படும் பொந்துகளில்தான் சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகள் சிறுகூடு கட்டி வசித்தன. தற்போதைய காலகட்டத்தில் கட்டிடங்கள் பெரிதாகின. மரங்கள் குறைந்தன. வீடுகளில் குளிர்சாதன வசதி உள்ளிட்ட தொழில்நுட்பங்களும் மேம்பட்டுவிட்டன.
உறவுகளாக இருந்த நாம் சிட்டுக்குருவிகளுக்கு அந்நியமாகி விட்டோம். 13 ஆண்டுகள் ஆயுள்காலம் கொண்ட சிட்டுக்குருவிகள் இப்போது 5 ஆண்டுகளுக்குள்ளாகவே இறந்துவிடுகின்றன. இந்த நிலைக்கு காரணம் மனித இனத்தின் அசுர தொழில்நுட்ப வளர்ச்சி என்றால் அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
வீட்டுக்குள் வெளிக்காற்று வர முடியாதபடி நெருக்கமான நகர்ப்புற வீடுகளில் குருவிகள் வாழவே முடியாத சூழல் உள்ளது என்பதை மறுக்க முடியாது. நகர்புறங்களில் உள்ள கண்ணாடி ஜன்னல்களின் அர்த்தம் புரியாமல் அதில் மோதி உயிரிழக்கும் சோகம் கூட நடந்துள்ளது. கிராமப்புறங்களிலும் வீடுகள் கான்கீரிட் ஆனதால் குருவிகள் வீட்டிற்குள் வருவது குறைந்துவிட்டது.