சென்னை: தக்காளி உற்பத்தியில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தில் உள்ளன. இந்த இரண்டு மாநிலங்களும் தமிழகத்தின் தக்காளி தேவையை பூர்த்தி செய்கின்றன.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கர்நாடகாவில் உள்ள சிந்தாமணி, ஒட்டிப்பள்ளி, சீனிவாசபுரம் மற்றும் ஆந்திர மாநிலம் பழமனேரி, மதனப்பள்ளி, புங்கனூர் ஆகிய பகுதிகளில் இருந்து தக்காளி கொண்டு வரப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தக்காளி வரத்து குறைந்துள்ளதால், விலை உயர்ந்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த வாரம் கிலோ ரூ.33-க்கு விற்ற தக்காளி இன்று கிலோ ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. திருவல்லிக்கேணி ஜாம்பஜார், பெரம்பூர் மார்க்கெட், சைதாப்பேட்டை மார்க்கெட் போன்ற சில்லரை சந்தைகளில், தரத்திற்கு ஏற்ப கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது.
சூப்பர் மார்க்கெட்டுகளில் கிலோ ரூ.74-க்கு விற்கப்படுகிறது. கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.67-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை திடீரென இரு மடங்காக உயர்ந்துள்ளது குறித்து கோயம்பேடு மார்க்கெட் பூ, பழம் மற்றும் பழ வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.தியாகராஜனிடம் கேட்டபோது, “தக்காளி அதிக அளவில் விளையும் ஆந்திரா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வருகிறது.
இதனால், மழை குறைந்து, வெப்பம் அதிகரித்துள்ளதால், உற்பத்தி குறைந்து, சந்தைக்கு வரத்து குறைந்து, இந்த விலை உயர்வு 3 வாரங்களுக்கு நீடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது .