விருதுநகர் : மாணவர்களின் தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்தும் வகையில் தமிழ் மொழி இலக்கியத் திறன் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-2025-ம் கல்வியாண்டுக்கான தமிழ் இலக்கியத் திறனறிவுத் தேர்வு அக்டோபர் 19-ம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தேர்வில் மாநில அளவில் 1,500 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளி மூலம் 2 ஆண்டுகளுக்கு மாத உதவித் தொகையாக ரூ.1,500 வழங்கப்படும்.
இந்தத் தேர்வில் 50 சதவீத அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதம் பேர் மற்ற தனியார் பள்ளிகளிலிருந்தும் தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்வு தமிழக அரசின் 10-ம் வகுப்பு தமிழ் பாடத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் தேர்வு நடைபெறும்.
2024-2025-ம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளிலிருந்தும் பிளஸ்-1 (மெட்ரிக்/சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ) படிக்கும் மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.50யுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நாளை (செப்டம்பர் 19)க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.