கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிடுகின்றனர். ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்தாலும், ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் கோடை காலமாகக் கருதப்படுகின்றன. இந்த பருவத்தில் தற்போது சுற்றுலாப் பயணிகள் குடும்பமாக வருகிறார்கள்.

கன்னியாகுமரியில் உள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு சேவையை நடத்தி வருகிறது. இந்த சேவை தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், சுற்றுலா படகு சேவை கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சாதாரண கட்டணம் ரூ.75 லிருந்து ரூ.100 ஆகவும், மாணவர் கட்டணம் ரூ.30 லிருந்து ரூ.40 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்பு கட்டணமாக ரூ.300-ல் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.