விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் பயண முகவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சுற்றுலா வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, வரும் ஜூன், ஜூலை மாதங்களில் சென்னை-விசாகப்பட்டினம்-புதுச்சேரி இடையே 3 சுற்றுலா கப்பல் சேவைகள் இயக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. அதன்படி, ஜூன் 30-ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் கப்பல் ஜூலை 2-ம் தேதி விசாகப்பட்டினம் வந்தடைகிறது.
இந்த கப்பல் அன்றைய தினம் விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு 4-ம் தேதி புதுச்சேரியை வந்தடையும். 4-ம் தேதி மீண்டும் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு மறுநாள் 5-ம் தேதி சென்னை வந்தடையும். இரண்டாவது சேவையாக இந்த கப்பல் ஜூலை 7-ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு 9-ம் தேதி விசாகப்பட்டினம் வந்தடையும். அன்றைய தினம் இங்கிருந்து புறப்பட்டு 11-ம் தேதி புதுச்சேரி சென்றடையும். பின்னர் அன்றைய தினம் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு 12-ம் தேதி சென்னை வந்தடையும்.
மூன்றாவது சேவையாக இந்த கப்பல் ஜூலை 14-ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு 16-ம் தேதி விசாகப்பட்டினம் சென்றடையும். பின்னர் அன்றைய தினம் இங்கிருந்து புறப்பட்டு 18-ம் தேதி புதுச்சேரி சென்றடையும். மீண்டும் அதே நாளில் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு மறுநாள் 19-ம் தேதி சென்னை வந்தடையும். கார்டில்லா குரூஸ் நிறுவனத்தால் இந்த கப்பல் இயக்கப்படும். இதற்கான கட்டண விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.