தென்காசி : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை பெய்த மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அனைத்து முக்கிய அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் நேற்று பகல் முழுவதும் வெயில் அவ்வளவாக இல்லை. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு முதல் அதிகாலை வரை மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நேற்று காலை முதல் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மைனா அருவியில் பாதுகாப்பு வளைவு மீது தண்ணீர் விழுந்தது. ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி நேற்று அதிகாலை 4 மணி முதல் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து முக்கிய அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.
தடை உத்தரவு காரணமாக வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் வீடு திரும்பினர். நேற்றும் பகல் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்தது. சூரிய ஒளி இல்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.