தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல், வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் போன்ற பகுதிகளில் பெய்யும் மழைநீர் இங்கு அருவியாக விழுகிறது.
நீரின் ஓட்டத்திற்கு ஏற்ப சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுகிறது. கடந்த வாரம் தண்ணீர் வரத்து சீராக இருந்ததால் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் நேற்று கொடைக்கானல் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து இன்று (அக்.12) காலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆயுதபூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறை என்பதால் நேற்று ஏராளமானோர் அருவியில் குளிப்பதற்காக வந்திருந்தனர். திடீர் தடையால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
வெள்ளம் காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். நீர்வரத்து சீரானதும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர், என்றனர்.