சென்னை/ தாம்பரம்: சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில் தாம்பரம் யார்டில் புதிய தரைப்பாலம் பணி காரணமாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நேற்று முன்தினம் அறிவித்தது. மேலும், சென்னை கடற்கரை – பல்லாவரம், கூடுவாஞ்சேரி – செங்கல்பட்டு இடையே இரு திசைகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை கூடுவாஞ்சேரி – பல்லாவரம் இடையே மின்சார ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன. கடற்கரை – பல்லாவரம் மற்றும் கூடுவாஞ்சேரி – செங்கல்பட்டு இடையே 30 நிமிட இடைவெளியில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், கிளாம்பாக்கம், செங்கல்பட்டு செல்லும் பயணிகள் பல்லாவரம் ரயில் நிலையத்தில் இறங்கி பேருந்து, ஆட்டோ, காரில் பயணம் செய்தனர்.
பல்லாவரம் வரை மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்பதை அறிந்த ஆட்டோக்கள், கார்கள் பல்லாவரத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டன. ஆட்டோக்களில் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டினர். செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு வரும் பயணிகள் கூடுவாஞ்சேரி வரை ரயிலில் பயணம் செய்தனர். அங்கிருந்து தாம்பரம், சென்ட்ரல் போன்ற பகுதிகளுக்கு பஸ்சில் சென்றனர்.
குறிப்பாக, தாம்பரத்தில் ரயில்கள் இயக்கப்படாததால், பயணிகள் அனைவரும் பஸ்சில் பயணம் செய்தனர். இதனால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பொங்கல் பண்டிகைக்கு புது ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டுமே இயக்கப்படும் சில சிறப்பு மின்சார ரயில்களிலும் கூட்ட நெரிசலில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.