சென்னை: தொடக்கக் கல்வி இயக்குனரகம் சார்பில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:- தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இது தவிர தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர்களுக்கு பெங்களூரில் உள்ள தென்னிந்திய பிராந்திய ஆங்கில மொழிப் பயிற்சி நிறுவனம் மூலம் ஆங்கிலம் கற்பிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்படும்.
இப்பயிற்சி முகாம் ஜனவரி 16-ம் தேதி முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும். ஆசிரியர்களை தேர்வு செய்யும் போது உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் அனைத்து விவரங்களையும் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் கையெழுத்திட்டு ஜனவரி 7-ம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.