சென்னை: கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் குறித்து அரசு அதிகாரிகளுக்கு சுற்றுச்சூழல் துறை சார்பில் சென்னையில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழகம் 1076 கி.மீ கடற்கரையை கொண்ட மாநிலம். இந்தப் பகுதியில் பல புதிய திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. விதிகளை மீறி பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் மீனவ மக்கள் மற்றும் இதர பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், அவற்றைப் பாதுகாக்கவும், விதிமீறல்களைத் தடுக்கவும், புதிய திட்டங்களுக்கு உரிய அனுமதி வழங்கவும், கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு உத்தரவு – 2019 தொடர்பான விதிகளை அறிந்து கொள்வது அவசியம். எனவே, கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு ஆணை குறித்த பயிலரங்கம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த அரசு அலுவலர்களுக்கு, அரசு சுற்றுச்சூழல் துறை சார்பில், சென்னை, ரிப்பன் மாளிகை வளாகத்தில், நேற்று நடந்தது.
இதில் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் ராகுல்நாத் பங்கேற்று பயிலரங்கை துவக்கி வைத்தார். இதில், தேசிய நிலையான கடலோர மேலாண்மை மையம் (என்சிஎஸ்சிஎம்), தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் (என்சிசிஆர்) மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். முடிவில் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.