சென்னை: ஆரம்பப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, எளிய முறையில் ஆங்கிலம் கற்பிப்பது குறித்து பெங்களூரில் ஒரு மாத பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து, தொடக்கக் கல்வித் துறை இயக்குனரகம் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர்களுக்கு பெங்களூருவில் உள்ள தென்னிந்திய பிராந்திய ஆங்கில மொழிப் பயிற்சி நிறுவனம் மூலம் ஆங்கிலம் கற்பிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்படும்.
இப்பயிற்சி முகாம் ஜனவரி 16-ம் தேதி முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடக்கிறது.இதில் ஏற்கனவே பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கண்டறிந்து பங்கேற்க அழைக்க வேண்டும். ஆசிரியர்களை தேர்வு செய்யும் போது உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் அனைத்து விவரங்களையும் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் கையெழுத்திட்டு, ஜனவரி 7-ம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.