சென்னை: அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலகண்ணன் தலைமையில் பேரவை தலைவர் தாடி ம.ராசு, பொருளாளர் அப்துல்அமீது ஆகியோர் நேற்று சென்னை தலைமை அலுவலகத்தில் போக்குவரத்து துறை செயலாளர் பனீந்திர ரெட்டியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கமலக்கண்ணன் கூறியதாவது:- அரசு போக்குவரத்து கழகங்களில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்பட்டது. இதை அண்ணா தொழிற்சங்கம் ஏற்கவில்லை. தற்போது 4 ஆண்டுகள் கடந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை இதுவரை தள்ளி வைத்துள்ளது.
இதை உடனடியாக துவக்க வேண்டும் என, போக்குவரத்து துறை செயலரிடம் மனு அளித்துள்ளோம். மேலும் அந்த ஓராண்டுக்கான இழப்பீடு மற்றும் இடைக்கால நிவாரணமாக ஒவ்வொரு ஓட்டுனருக்கும் தலா ரூ.3 ஆயிரத்து 500 வழங்க வலியுறுத்தி உள்ளோம்.
ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை உயர் நீதிமன்ற உத்தரவின்படி வழங்கப்படும். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
அதிமுக ஆட்சியில் கொரோனா பாதிப்பு இருந்தபோதும் 10 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டது. அடுத்த முறை 20 சதவீதம் போராடி வாங்கினோம். தற்போது செலவுகள் அதிகமாக இருப்பதால் இந்த ஆண்டு 30 சதவீத தீபாவளி போனஸ் கேட்டுள்ளோம்.
இக்கோரிக்கைகளை அக்டோபர் 10-ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடக்காவிட்டால் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் போக்குவரத்து கழக மண்டல அலுவலகங்கள், கோட்ட அலுவலகங்கள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவோம்.
தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நியாயமான ஊதியத்தை வழங்க அரசு தயக்கம் காட்டுவதால், முதற்கட்டமாக காத்திருப்பு போராட்டம் நடத்துவோம். காலப்போக்கில் கூலி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினால், தீபாவளி நேரத்தில் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.