தூத்துக்குடி: பிரதமர் மோடி நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி, 3வது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, ஏழைகள் பயன்பெறும் வகையில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இரண்டாவது கையெழுத்து மூலம் விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி வழங்கியுள்ளார். பிரதமர் மோடி இந்த நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார். கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம், வஉசி துறைமுக விரிவாக்கத் திட்டம் போன்ற வளர்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. தூத்துக்குடி-மதுரை இரட்டை ரயில் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓடுபாதையே 3 கிலோமீட்டர் நீளம் கொண்டது. அதாவது தூத்துக்குடி விமான நிலையத்தில் சென்னையை விட பெரிய ஓடுபாதையும், பெரிய ஏர்பஸ் விமானங்களை தரையிறக்கும் வசதியும் உள்ளது.
கருணாநிதி நாணய வெளியீட்டு விழா அரசு விழா. இது அரசியலுக்கு அப்பாற்பட்டது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்றதால், தமிழகத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் ஏற்படப் போவதில்லை. தமிழக அமைச்சர்கள் மக்களுக்கு செய்யும் கேடுதான் அதிகம். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.