சென்னை: தமிழக அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் பல்வேறு தொழில் மற்றும் கல்விப் பின்னணியில் உள்ள இளம் தொழில் வல்லுநர்களின் திறமைகளைப் பயன்படுத்த ‘முதல்வரின் புத்தாய்வு திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 2022-24-ம் ஆண்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 30 இளம் தொழில் வல்லுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, 2 ஆண்டுகளாக பல்வேறு அரசுத் துறைகளின் திட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டது.
அவர்களில் ‘பொது கொள்கை மற்றும் மேலாண்மை’ பிரிவில் முதுகலை பட்டம் பெற்று 2 ஆண்டுகள் முடித்த 19 பேரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் கவுரவித்தார். இதைத் தொடர்ந்து, 2024-26-ம் ஆண்டுக்கான ‘முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின்’ கீழ் 25 இளம் தொழில் வல்லுநர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, கணினி அடிப்படையிலான முதல் கட்டத் தேர்வு, விரிவான எழுத்துத் தேர்வு, நேர்காணல் என 3 கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டன. முதல் கட்டத் தேர்வில் 5,327 பேர் பங்கேற்ற நிலையில், அவர்களில் 501 பேர் விரிவான எழுத்துத் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களில் 177 பேருக்கு நேர்காணல் நடத்தப்பட்டு, 25 இளம் தொழில் வல்லுநர்களின் இறுதிப் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
தேர்வு செய்யப்பட்ட 25 இளம் தொழில் வல்லுநர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “முதலமைச்சரின் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் 2024-26-ம் ஆண்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் வல்லுநர்களுக்கு எனது வாழ்த்துகள். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் இந்த மதிப்புமிக்க முயற்சியின் மூலம் அனைவரும் கற்று, முன்னேறி வெற்றிபெற வாழ்த்துகிறேன்.