சென்னை: இது தொடர்பாக, பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) செயலாளர் மணீஷ் ஆர். ஜோஷி அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரங்கள்:-
இந்திய மற்றும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டுப் பட்டம் மற்றும் இரட்டைப் பட்டப்படிப்பு திட்டங்களுக்கான விதிமுறைகள்-2022 டிசம்பர் 12, 2023 அன்று UGC-ல் வெளியிடப்பட்டது. இந்தியாவில் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களின் வளாகங்களை நிறுவுதல் மற்றும் செயல்படுத்துவதற்கான விதிமுறைகள்-2023 அதே ஆண்டில் வெளியிடப்பட்டன.

இந்த விதிகளை முறையாகப் பின்பற்றாமல், பல்வேறு உயர்கல்வி நிறுவனங்கள் UGC-ல் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தங்களைச் செய்துள்ளன. மேலும், அந்த நிறுவனங்கள் தங்கள் கல்லூரிகளின் மாணவர்கள் அத்தகைய வெளிநாட்டு கல்வி நிறுவனங்களிலிருந்து பட்டங்களைப் பெறுவதற்கு வசதி செய்து கொடுப்பதாகவும் யுஜிசியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி, சில தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆன்லைன் பட்டம் மற்றும் டிப்ளமோ படிப்புகள் குறித்து செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வழங்கி வருகின்றன. இதற்கு யுஜிசி எந்த அனுமதியும் வழங்கவில்லை. எனவே, அத்தகைய பட்டங்களை யுஜிசி அங்கீகரிக்காது.
மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் உயர்கல்வி நிறுவனங்கள் மீது தொடர்புடைய விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களும் பொதுமக்களும் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.