அரியலூர்: அரியலூர் நகரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கோதண்டராமசாமி கோயிலில் தேர் சீரமைக்கும் பணி இந்து சமய அறநிலையத்துறை மூலம் நடைபெற்று வருகிறது. தேர் பழுதுபார்க்க ரூ.18.5 லட்சமும், தேர் திருப்பணிக்கு ரூ. 22.5 லட்சத்தில் தேர் வைக்க கொட்டகை அமைக்கும் பணியும், இதற்கான பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
போக்குவரத்து தொழிலாளர்களின் முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. 15 நாட்கள் கழித்து அடுத்த அமர்வில் பேசுவோம். ஒரு சில கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. கல்வியின் மகத்துவம் தெரியாத ஒரு கூட்டம் மத்திய அரசில் உள்ளது. இருமொழிக் கொள்கை அமலாக்கத்தால் இன்று தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கணினி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். எனவே, இருமொழிக் கொள்கையே மிகவும் பொருத்தமானது.
ஒருபுறம், நம் தாய்மொழி கற்பது. மறுபுறம், உலகின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் கற்பது. இதைத்தான் அன்று பேரறிஞர் அண்ணா கொண்டு வந்தார். எனவே, இது போதும். மூன்றாவதாக, நமக்குச் சம்பந்தமில்லாத ஒரு மொழியை நம்மீது திணிக்கும்போது, அந்தச் சுமையை மாணவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருபுறம் வட இந்தியாவிற்கு ஒரே மொழிக் கொள்கை. அவர்கள் ஹிந்தி மட்டுமே கற்றுக்கொள்கிறார்கள். நம் தாய்மொழி இல்லாமல் இன்னொரு மொழியை மட்டும் நம் மீது திணிக்கிறார்கள்.
இன்றைய உலகில் ஆங்கிலம் இணைக்கும் மொழி. ஆங்கிலம் கற்றாலே போதும். தேசிய கல்விக் கொள்கை என்று சொல்பவர்களின் நிலையில் மெல்ல மெல்ல தாய்மொழியை இழந்து வருகின்றனர். இதை அவர்கள் தமிழகத்தைப் பார்த்தும், அண்டை நாடான கேரளாவைப் பார்த்தும் உணர வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்று திறமையாக கையாண்டால் மட்டுமே கல்விக்கு நிதி ஒதுக்குவது என பல்வேறு நிதி நெருக்கடிகளை தமிழக முதல்வர் சந்தித்துள்ளார். இதையும் எங்கள் முதல்வர் திறமையாக கையாள்வார்,” என்றார்.