மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் நாளை முதல் யுபிஐ மற்றும் கார்டு பேமெண்டுகளை ஏற்க மாட்டோம் என அறிவித்துள்ளனர். காரணம், கடந்த சில மாதங்களாக அதிகரித்துவரும் சைபர் மோசடிகள் மற்றும் வங்கிக் கணக்கு முடக்கங்கள். பொதுமக்கள் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் போது, சில மோசடியாளர்கள் அதன் பின் பணம் திரும்பப் பெற தேசிய சைபர் போர்ட்டலில் புகார் அளிக்கிறார்கள்.

இதனால் பெட்ரோல் பங்குகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவதுடன், உரிமையாளர்கள் தங்கள் பணத்தையே எடுத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இது ஒரு நாளைய போராட்டமாக இருந்தாலும், தீர்வு கிடைக்கும் வரை தொடர வாய்ப்பு உள்ளது.
இந்த முடிவை விதர்பா பெட்ரோலியம் டீலர் அசோசியேஷன் உறுதியாக எடுத்துள்ளது.மும்பை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் இந்நிலை காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில, பொதுமக்கள் கையில் ரொக்கத்தை வைத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. நாடு முழுவதும் பரவியிருக்கும் யுபிஐ சந்தாதாரர்கள் இந்த முடிவால் நிச்சயமாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
முந்தைய சம்பவங்களைப் பார்த்தால், வடமாநிலங்களில் தொடங்கிய மோசடிகள் சில வாரங்களில் தென் மாநிலங்களிலும் பரவி விட்டன. இதேபோல், யுபிஐ மோசடிகளும் விரைவில் தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளிலும் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
இதனால், மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் சந்திக்கும் பிரச்சனையை அரசு கவனித்து, மோசடிகளுக்கான பாதுகாப்பான தீர்வு வழங்க வேண்டும். இல்லையெனில் நாடு முழுவதும் யுபிஐ மோசடி பரவலாக பரவி, மக்கள் மற்றும் வணிகர்கள் இருவரும் சிக்கலில் சிக்க வாய்ப்பு அதிகம்.