சென்னை: அமெரிக்கா இந்தியப் பொருட்கள் மீது 50% வரி விதித்ததால், தமிழக ஏற்றுமதியாளர்கள் கடுமையான சிக்கலில் சிக்கியுள்ளனர். குறிப்பாக, ஜவுளி, ஆடை, தோல், காலணிகள், ஆட்டோ உதிரி பாகங்கள், கடல் உணவுகள் உள்ளிட்ட துறைகள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலை தொடர்ந்தால், திருப்பூர், கோயம்புத்தூர், வேலூர் மற்றும் தூத்துக்குடி போன்ற பகுதிகளில் உள்ள தொழில்கள் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும். தொழிற்சாலைகள் மூடப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு உள்ளாகும் அபாயம் நிலவுகிறது.

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், “ஏற்றுமதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை ஒன்றியமும் மாநிலமும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது:
“இந்த புதிய வரி விதிப்பு காரணமாக, அமெரிக்க வணிகர்கள் இந்தியப் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கிறார்கள். வங்கதேசம் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு இத்தகைய வரி விதிக்கப்படாததால், அவர்களின் பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கின்றன. இது தமிழக ஏற்றுமதியாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.
தொழில்கள், தொழில்முனைவோர், தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் போன்றோர் வாழ்வாதாரம் ஆபத்தில் இருக்கிறது. எனவே, ஒன்றியமும் மாநில அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு நிதி உதவி, வரி சலுகை, வட்டி மானியம், அவசரக் கடன் உத்தரவாதத் திட்டம் உள்ளிட்ட சிறப்பு நிவாரணங்களை அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க வரிவிதிப்பு பிரச்சினை விரைவில் தீர்க்கப்படாவிடில், தமிழகத்தின் ஏற்றுமதி பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்ற எச்சரிக்கையும் விஜயின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.