குன்னூர்: நீலகிரி மாவட்டம், குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், மலைகள், தேயிலை தோட்டங்கள், ஓடைகள் உள்ளிட்ட பசுமையான செடிகள் சூழ்ந்துள்ள காட்டேரி பூங்கா உள்ளது. தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால், இவ்வழியாக வரும் சுற்றுலா பயணிகள் பூங்காவை கண்டு ரசித்து வருகின்றனர். இந்த ஆண்டு கோடை சீசனில் முதன்முறையாக மே 31-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை காட்டேரி பூங்காவில் ‘மலைப் பயிர்கள் கண்காட்சி’ நடைபெறவுள்ளது.
இதற்காக, தேயிலை, காபி, ரப்பர், மற்றும் தென்னை, பனை, கருப்பட்டி, தென்னை, கொக்கோ, பலா உள்ளிட்ட பணப்பயிர்களின் அலங்கார வடிவமைப்புகளை மேற்கொள்ள தோட்டக்கலைத்துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், மலைப் பயிர்கள் கண்காட்சிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மலர் நாற்றுகள் அடங்கிய பூந்தொட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதனை பாதுகாக்கும் பணியில் தோட்டக்கலை துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கோடை காலம் நெருங்கி வருவதால் காட்டேரி பூங்கா பசுமையாக மாறி அழகாக காட்சியளிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.