சென்னை: சென்னை – காட்பாடி இடையே முதல் வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கியது. சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் ஆலையில் வந்தே பாரத் ரயில், அம்ரித் பாரத் ரயில் (சதரண் வந்தே பாரத் ரயில்) மற்றும் வந்தே மெட்ரோ ரயில் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இதில், முதல்கட்டமாக வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி கடந்த மாதம் நிறைவடைந்தது.
12 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் ஏசி வசதி, கவர்ச்சிகரமான உள்துறை அலங்காரம், சொகுசு இருக்கைகள் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளன. கண்காணிப்பு கேமராக்கள், அதிநவீன கழிவறைகள் மற்றும் தானியங்கி கதவுகள் போன்ற வசதிகளும் உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 104 பேர் அமரலாம். 200 பேர் நிற்கலாம். அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் உட்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஐசிஎஃப் ஆலையில் இந்த ரயிலில் பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, சோதனை ஓட்டமாக ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ரயிலின் சோதனை ஓட்டம் இன்று (ஆகஸ்ட் 3) காலை சென்னை – காட்பாடி இடையே தொடங்கியது.
வில்லிவாக்கத்தில் இருந்து இன்று காலை 8.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு 9.00 மணிக்கு வந்தடைந்தது. தொடர்ந்து, காலை 9.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 10 மணிக்கு வில்லிவாக்கம் சென்றடைந்தது. அங்கு ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர அமைப்பு அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு ஆணையர், ஐசிஎப் அதிகாரிகள் ரயிலில் ஏறினர். இதையடுத்து, வில்லிவாக்கிலிருந்து காலை 10.15 மணிக்கு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் அரக்கோணம் வழியாக காட்பாடியை 11.55க்கு சென்றடைகிறது. காட்பாடியில் இருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ”ரயில்வே வாரிய உத்தரவின் பேரில், சென்னையில் மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. வந்தே மெட்ரோ ரயிலின் வேகம், சிக்னல் தொழில்நுட்பம், ரயில் நிலையங்களில் நடைமேடைகளில் சரியாக நிற்பது குறித்து ஆய்வு செய்யப்படும். இந்த ரயில் எந்த வழித்தடத்தில் இயக்கப்படும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை,” என்றார். சோதனை ஓட்டத்தின் போது மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.