வன்னியர் சங்கம் நடத்தும் சித்திரை முழு நிலவு மாநாடு, 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெற உள்ளது. முந்தைய மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, இம்முறை காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மாநாட்டிற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் வருகிற மாதம் 11ஆம் தேதி இந்த மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் பங்கேற்கும் வாகனங்கள் குறித்து முன்கூட்டியே தகவல் அளித்து டிஎஸ்பி அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து வரும் வாகனங்களுக்கு வெவ்வேறு நிறங்களில் அடையாள அட்டைகள் வழங்கப்படும். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களிலேயே அந்த வாகனங்கள் செல்ல வேண்டும். அடையாள அட்டை இல்லாத வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.
மாநாட்டிற்காக வரவுள்ள அனைத்து வாகனங்களும் வீடியோ பதிவுக்குட்படுத்தப்பட வேண்டும். இருசக்கர வாகனங்கள் மாநாட்டிற்குள் அனுமதிக்கப்படமாட்டாது. மேலும், சாதி உணர்வைத் தூண்டும் வகையில் பேச்சுகள், கோஷங்கள், ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவது ஆகியவை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. மாநாடு இரவு 10 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்பதும் காவல்துறை விதித்த முக்கியமான நிபந்தனை ஆகும்.
இந்த ஆண்டு மாநாடு அமைதியாகவும் ஒழுங்காகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் காவல்துறை தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.