மதுரை: ‘நியோ மேக்ஸ்’ மற்றும் அதன் 42 துணை நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், நவ., 15 வரை புகார் அளிக்கலாம் என, மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் இன்றுவெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘நியோ மேக்ஸ்’ மற்றும் அதன் 42 துணை நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகளை பெற்று பொதுமக்களை ஏமாற்றியுள்ளன. அந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் முகவர்கள் என, 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர்.
இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்து வருகிறது. நீதிமன்ற உத்தரவின்படி, நியோ மேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், ஆதார் எண், முதலீட்டுப் பத்திரங்களின் எண்ணிக்கை, நிறுவனத்தின் பெயர், முதலீட்டுத் தொகை, முதலீட்டின் வங்கிக் கணக்கு ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
சங்கரபாண்டியன் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம், தங்களது பெயர், முகவரி, செல்போன் எண், ஆதார் எண், முதலீட்டு பாத்திரங்ளின் எண்ணிக்கை போன்ற விவரங்களுடன் நவம்பர் 15-ம் தேதி வரை நேரில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.