சென்னை: ”பாஜக அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு (காஸ் சிலிண்டர்) விலை உயர்வு, சாமானிய மக்கள் மீதான நேரடி தாக்குதல். மக்களின் அன்றாட வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் சூழலில், மத்திய அரசின் இந்த விலைவாசி உயர்வு மக்களை மேலும் ஒடுக்குவதாகவே உள்ளது. ஒவ்வொரு முறை சமையல் எரிவாயு வாங்கும் போதும் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் மானியத் தொகை வரவு வைக்கப்படும் என அறிவிப்பதையே குறியாக வைத்துள்ள மத்திய ஆட்சியாளர்கள், மக்களை எளிதில் ஏமாற்ற நினைக்கின்றனர்.
அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ள இச்சந்தர்ப்பத்தில், மத்திய அரசு சமையல் எரிவாயுவின் விலையை கடுமையாக உயர்த்தி மக்களின் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றியதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தல் நெருங்கும்போது சமையல் எரிவாயு விலையை குறைத்து, தேர்தல் முடிந்தவுடன் விலையை உயர்த்துவதை வழக்கமாக்கிய மத்திய ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்ட காத்திருக்கின்றனர். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. ஒரு சிலருக்கு மட்டுமே அனைத்து சலுகைகளையும் வழங்கி வரும் மத்திய அரசு, மக்களை மகிழ்விப்பது குறித்து எப்போது சிந்திக்கும்?

தேர்தல் காலத்தில் மக்கள் மீது மட்டும் அக்கறை இருக்குமா? இந்நிலையில், காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம்’ என்பது கடந்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான நான்கு ஆண்டுகளாகியும் எதையும் செய்யவில்லை. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்துவிட்டு மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ஏமாற்றி வருகிறது. இந்தப் போக்கை திமுக அரசு எப்போது நிறுத்தும்? என மக்கள் கேட்கின்றனர்.
மத்திய பாஜக அரசும், திமுக அரசும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி ஒடுக்கி வருகின்றன. சாமானிய மக்களை பெரிதும் பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசை குற்றம் சாட்டிவிட்டு தப்பித்துவிடலாம் என்று நினைக்கும் திமுக அரசு, இந்த நேரத்திலாவது தேர்தல் அறிக்கையில் அறிவித்த சமையல் எரிவாயு மானிய வாக்குறுதியை மனசாட்சிப்படி நிறைவேற்ற வேண்டும். திரும்பத் திரும்ப பொய் சொல்லி ஏமாற்றும் வகையில் செயல்படும் பாஜக அரசின் மக்கள் விரோதச் செயல்களுக்கும், திமுக அரசுக்கும் எதிராக மக்கள் போராட்டத்தின் எதிர்வினை மிகவும் வலுவாக இருக்கும். தமிழக வெற்றிக் கட்சி மக்களுடன் களத்தில் நிற்கும்,” என்றார்.